மின்னல் தாக்கி தந்தை மகன் உடல் கருகி உயிரிழப்பு; பயிரைக் காக்கச் சென்று உயிரை விட்ட விவசாயிகள்!

நள்ளிரவு பெய்த கனமழையின் அடுத்து மன்னார்குடி அருகே தனது சாகுபடி வயலில் பயிரை பாதுகாக்க சென்ற விவசாயி அவரது மகன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மட்டும் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவை சேர்ந்த விவசாயி அன்பரசன் (55), தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள தனது வயலில் நேரடி நெல் விதைப்பு பணியினை செய்துள்ளார்.

இத்தகைய சூழலில் நேற்று இரவு பெய்த கன மழையில் தனது வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சிய அவர், தனது மகன் அருள்முருகனை அழைத்துக்கொண்டு வயலை பார்வையிட சென்றுள்ளார். அப்போது தனது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் மகனும், தந்தையும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் மின்னல் தாக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த வயலுக்கு விரைந்து வந்த அன்பரசன் மனைவி, அருள்முருகன் மனைவி என ஒட்டுமொத்த குடும்பமே இருவரது சடலத்தையும் பார்த்து கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து, இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். நள்ளிரவு என பார்க்காமல் வயலுக்கு சென்று பயிரை காப்பாற்றிட போராடிய தந்தை, மகன் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில், ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment