தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி விவசாயத்தை பாதிக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலம் அருகே பூலாவரியில் எட்டு வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்……
எட்டு வழி சாலை திட்டம் குறித்து தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தார் .
இது எட்டு வழி சாலை பாதிப்பு விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று சேலம் அருகே 8 வழி சாலையால் பாதிக்கப்படும் பூலாவரி, பாரப்பட்டி , உத்தமசோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 பேர் தங்கள் கால்நடைகளுடன் பூலாவரியில் உள்ள தங்கள் விளை நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
எட்டு வழி சாலை திட்டத்தை ஏற்கனவே உள்ள மூன்று சாலைகளில் ஏதாவது ஒரு சாலையில் விரிவாக்கம் செய்து நிறைவேற்ற வேண்டும். புதிதாக விளைநிலங்களை அழித்து, எட்டு வழி சாலை திட்டத்தை கொண்டு வரக்கூடாது. எட்டு வழிச் சாலை திட்ட அறிவிப்பால், தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவோ, திருமணத்திற்காகவோ தங்கள் நிலங்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பாதிப்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.