தீவனம் விலை குறைவு; தீராத வேதனையில் தேனி விவசாயிகள்!

இரண்டாம் போக நெல் அறுவடையில் மகசூல் குறைதுள்ள நிலையில், கால்நடைகளின் தீவனமான வைக்கோல் விலையும் குறைந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெறுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் நவம்பர் மாதம் நடவு செய்யப்பட்ட இரண்டாம் போக நெல் சாகுபடியில் தற்போது விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.

கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி வீரநாயக்கன்குளம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் விளைந்த நெல்மணிகளை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இரண்டாம் போக நெல் விவசாயத்தில் நிலவிய கடும் பனிப்பொழிவு வெயில் மற்றும் நோய், பூச்சி தாக்குதல் காரணமாக விளைச்சல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நோயினையும், பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்த மூன்று முறை உரம் வைத்தும், பூச்சி மருந்து அடித்தும் இரண்டாம் போகத்தில் விளைச்சல் ஆனது பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது அறுவடையில் ஏக்கருக்கு 18 மூடைகள் (60 கிலோ) மகசூல் கிடைத்துள்ளதாகவும், கடந்த முதல் போகத்தில் ஏக்கருக்கு 45 மூடைகள் (60 கிலோ) வரை மகசூல் கிடைத்ததாகவும் கூறும் விவசாயிகள் இரண்டாம் போகம் விளைச்சல் முதல் போக்கத்தை காட்டிலும் பாதியாக சரிந்துள்ளது.

இதனால் உரம்,பூச்சி மருந்து மற்றும் அறுவடை செய்யும் இயந்திர செலவினங்களுக்கு கூட கட்டுபடியான விளைச்சல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் காலதாமதம் ஆவதால் தனியார் நெல் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யாமல் குறைந்த விலைக்கு அடித்து பேரம் பேசி விவசாயிகளிடம் நெல் மூடைகளை வாங்குவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

மேலும் அறுவடையில் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளின் தீவனத்திற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள், ஆனால் இரண்டாம் போகத்தில் வைக்கோல் விளையும் மிக குறைந்து விட்டதாகவும், முதல் போகத்தில் ஏக்கர் வைக்கோல் 3,000 முதல் 3,500 வரை விற்பனையானது. ஆனால் தற்பொழுது 1,000 முதல் 1,300 வரை விற்பனையாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். இரண்டாம் போகம் நெல் விவசாயம் ஒட்டு மொத்த கம்பம் பள்ளத்தாக்கு நெல் விவசாயிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.