நாடக ஜாம்பவான் : இந்திய சினிமாக்களின் முன்னோடி : யார் இந்த சங்கரதாஸ் சுவாமிகள்?

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பொழுது போக்கிற்காக மக்கள் மேடை நாடகங்களையும், இசைக் கச்சேரிகளையும் கண்டு மகிழ்ந்த தருணம் அது. மேடை நாடகங்கள் மூலம் பொதுமக்களை விழிப்புணர்வு அடையச் செய்து இப்போது உள்ள திரை ஜாம்பவான்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சங்கரதாஸ் பின்னாளில் முருகக்கடவுள் மேல் கொண்ட பற்றுக் காரணமாகவும் பெரும்பாலும் சுவாமி வேடங்களில் நடித்ததனாலும் மக்களை இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர். நாடகக் கலையின் மீது தீராப் பற்றுக் கொண்ட இவர் சாமி நாயுடு நாடகக் குழுவில் சிறிது காலம் பணியாற்றி பின்னர் தானே நாடகங்கள் இயற்றத் தொடங்கினார்.

சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக அவர் வாழ்க்கையில் அமைந்தது. இவர் சனீஸ்வரன் நாடகத்தில் சனிபகவான் வேடம் தாங்கி நடித்தார். விடியும் வரை நாடகத்தில் நடித்துவிட்டு விடியற்காலையில் வேடத்தைக் கலைப்பதற்காக ஏரிக்குச் சென்றார். அங்கே சலவை செய்து கொண்டு இருந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி சனீஸ்வரன் வேடத்தில் இருந்த சுவாமிகளைக் கண்டாள்; அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். இந்த நிகழ்ச்சி சுவாமிகளின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. இதன் பின்னர் சுவாமிகள் வேடம் தரிப்பதை நிறுத்தி விட்டார்.

அண்ணனுக்கு ஹிட் கொடுக்க ரெடியான சிறுத்தை சிவா : வெளியான கங்குவா மாஸ் போஸ்டர்

அதன்பின் நாடகங்கள் எழுதத் தொடங்கினார். சிறந்த தமிழ்ப் புலமையும், சொற் புலமையும் கொண்டிருந்தால் இவர் நாடகங்களின் தலைமை ஆசிரியர் என நாடகத் துறையினரால் அழைக்கப்பட்டார். பின்னாளில் சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி சரித்திரம், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம், இராம ராவண யுத்தம், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், சித்திராங்கி விலாசம், நளதமயந்தி போன்ற புகழ்பெற்ற நாடகங்கள் இவரது தமிழால் உருவானவையே.

இவரது நாடகப் பட்டறையில் நடித்து புகழ்பெற்றவர்கள் பின்னாளில் திரைப்படங்களிலும் கோலோச்சினர். நாடகப் பணியில் கிட்டத்தட்ட 50 நாடகங்களை சிறந்த மொழி நடையுடன் இயற்றியும் பல்வேறு நாடக சபாக்களில் ஆசிரியராகவும் பணியாற்றி இறுதியில் பாண்டிச்சேரியில் தன் வாழ்க்கையைத் துறந்தார்.

நேற்று (நவ.13) அவரது 101-வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரும், நாடகக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews