ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக கே.எஸ். தென்னரசுவே தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதேபோல் ஓபிஎஸ் அணியிலும் அதன் மாவட்ட செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் புது அடிமட்ட தொண்டனாக இருக்கும் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் எனத் தெரிவித்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார் என்றும், அவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்தை ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிட்டு நாளை மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க தமிழ் மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த ஒப்புதல் கடிதங்கள் திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ளது.