ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இரண்டு முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தென்னரசு என்பவரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக நடந்து முடிந்த சட்டசபை கூட்ட தொடரில் சட்டசபை செயலாளரால் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யாரை அறிவிக்க உள்ளார்கள் என்ற ஆவல் நீடித்து வந்தது. ஏனெனில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகள் உள்ளதால் யாருக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும், யாரை இருவரும் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் காத்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2001 – 2006, 2016 – 2021 என இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக உள்ளார்.
பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் கோரி இருந்த நிலையில், திடீரென அதிமுக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.