அவரை நான் தாக்கவில்லை... கண்ணீர் மல்க கூறிய ஜொமாட்டோ ஊழியர்!...

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த ஹிதேஷா சந்திரனி எனும் 28 வயதான மேக்கப் தொழில் செய்யும் பெண். இவர் கடந்த 9-ம் தேதி ஜொமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

 

பிற்பகல் நேரத்தில் அவர் ஆர்டர் பண்ணியதில் இருந்து சுமார் 1 மணி நேரம் கழித்து உணவு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதால், அந்த ஜொமாட்டோ டெலிவரி ஊழியரான 36 வயதான காமராஜ் என்பவருடன் ஹிதேஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,  ஒரு கட்டத்தில் அந்த ஊழியரை, ஹிதேஷா மரியாதை குறைவாக பேசியதாகவும், இதனால் கோபம் கொண்ட காமராஜ், ஹிதேஷாவை மூக்கில் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஹிதேஷாஎலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், தமக்கு நடந்தவை பற்றி தமது வலைதளத்தில் விளக்கம் அளித்து பதிவிட, ஜொமாட்டோ நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தினர்.  இதனால் ஜொமாட்டோ ஹிதேஷா சந்திரனியிடம் மன்னிப்பு கேட்டதுடன், காமராஜை பணி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், காமராஜை கைது செய்த போலீஸார், அவரை விசாரித்தபோது, 'ஹிதேஷா சந்திரனி தரக்குறைவாக பேசியதுடன், தம்மை இரு முறை அடித்ததாகவும், அதனால் தான் மீண்டும் கோபத்தில் அவரை தாக்கியதாகவும், மருத்துவ செலவுக்கு 25 ஆயிரம் அவருக்கு காமராஜ் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.  இதனிடையே வீடியோவில் இதுபற்றி பேசிய காமராஜ், “நான் ஹிதேஷாவை தாக்கவில்லை. உணவை அவரிடம் கொடுப்பதற்கு முன்பே, தாமதமாக வந்துவிட்டேன். இந்த ஆர்டரை தயது செய்து  ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி தான் உணவை டெலிவர் செய்தேன். ஆனால் அவரோ என்னை ஆங்கிலத்தில் திட்டினார்.

பின்னர் உணவை வாங்கி கதவுக்கு அருகில் வைத்துக்கொண்டுவிட்டு பணம் கொடுக்காமல் மறுத்தார்.  ஆனால் கேஷ் ஆன் டெலிவரி என்பதால் பணம் கொடுக்குமாறு நான் கேட்க, அவர் நான் தாமதாக வந்ததால் பணம் தர முடியாது என்று கூறியதுடன் என்னை அடிமை என்று கூறி மோசமாக நடந்து கொண்டார். ஆகையால் நான் உணவை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். இதை அவர் பார்த்ததுமே, என்னை தள்ளிவிட்டதுடன் இந்தியில் திட்ட தொடங்கினார். அத்துடன் செருப்பால் அடிக்கவும் என் மீது வீசவும் செய்தார். அவரிடம் இது தவறு மேடம், வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் அடித்தார். அப்போது அவரின் கையை பிடித்து நான் தள்ளிவிட, அவர் அணிந்திருந்த மோதிரம் அவர் மூக்கில் பட்டு, கட் ஆகி, அவருக்கு காயம் ஏற்பட்டது, நான் அவரை பஞ்ச் பண்ணல” என கூறியுள்ளார்.

மேலும் நான் 2 வருடமாக ஜொமோட்டாவில் வேலை பார்த்துள்ளேன். 5 ஆயிரம் ஆர்டர்களை டெலிவர் பண்ணியிருக்கேன். என் அப்பா 15 வருடத்துக்கு முன்பே இறந்துவிட்டார். என் அம்மா பி.பி. சர்க்கரை நோயாளி. வீட்டில் நான் ஒருவன் மட்டுமே சம்பாதிக்கிறேன். தயவு செய்து எனக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனிடையே ஜொமாட்டோவிடம், தயவு செய்து உண்மையை கண்டுபிடித்து சொல்லவும். அந்த ஜென்டில்மேன் உண்மையிலேயே அப்பாவியாக இருந்தால் (அப்பாவி என்றுதான் நான் நம்புகிறேன்), தயவு செய்து அந்த பெண்ணை தண்டியுங்கள். இது மனிதத்தன்மையற்ற வெட்கக் கேடான செயல். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கூறுங்கள் #ZomatoDeliveryGuy என்று குறிப்பிட்டு இளம் நடிகை பரினீத்தி சோப்ரா ட்வீட் பதிவிட்டுள்ளார்.  அத்துடன் #Mentoo, #JusticeForKamaraj ஆகிய ஹேஷ்டேகுகளின் கீழ் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

From around the web