சம்பள பாக்கி விஷயத்தில் விஜய் டிவி கூறிய பொய்: கஸ்தூரி ஆவேசம்

 

விஜய்டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனக்கு ஒரு வருடம் ஆகியும் சம்பளத்தை தரவில்லை என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் நேற்று குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், நேற்றிரவு விஜய் டிவி இதுகுறித்து அளித்த விளக்கத்தில் கஸ்தூரி இன்னும் ஜிஎஸ்டி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனால் தான் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிவித்து இருந்தது. விஜய் டிவியின் இந்த அறிவிப்புக்கு கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஆவேசமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பொய்யை  நிஜமென்று ஊரை நம்பவைப்பது பிக் பாஸ் புகழ் விஜய் டிவிக்கு புதிதா என்ன? இப்பொழுது எனது சம்பள பாக்கிக்கான காரணம் என்ன என்று விஜய் டிவி தரப்பில் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவும் அவர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் போலவே தான்.  உண்மை போலிருக்கும், ஆனால் முழுக்க பொய்தான்.

நானும் நம்பினேன்,  ஒரு வருடம் பொறுமை காத்தேன் . விஜய் டிவி ஒரு பெரிய தொலைக்காட்சி, உலகப்புகழ் டிஸ்னி ஸ்டார்  கார்பொரேட் நிறுவனம் என்று  மதித்து காத்திருந்தேன் . கடைசியில் வெறுத்து போய் வேறு வழியே இல்லாமல் தான் சம்பள பாக்கி விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தேன்.  

அவர்கள் கூறியிருக்கும் அபத்தங்களில் ஒன்று,  சம்பள பாக்கி இல்லை, வரியை மட்டும்  பிடித்து வைத்துள்ளார்கள் என்பது. GST வரியை அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்காமல் பிடித்து வைக்கவெல்லாம் முடியாது.  ஏனென்றால் GST  வரி கட்டுவது அவர்கள் அல்ல, நான்.   அதையும், விஜய் டிவி எனக்கு எழுதி குடுத்த கணக்கின் படி , அவர்களின் சொல்படி  நான் கட்டியுள்ளேன். எனது சம்பள படிவத்தை நிரப்பி கொடுத்ததே விஜய் டிவி  பொருளாளர்தான். மேலும், வரியை பிடித்து வைப்பதானால்  அரசுக்கும் எனக்கும்  முறைப்படி தகவல் தெரிவிக்கவேண்டும். அதெல்லாம் எதுவும் செய்யவில்லை.  பாக்கி வைத்துவிட்டு இப்பொழுது புளுகுகிறார்கள்.

என்னவோ  வேறு ஒரு நிகழ்ச்சி, அதற்க்கு நான் 'இன்வாய்ஸ்' கொடுக்கவில்லை என்று  சொல்கிறார்களே, அது எந்த நிகழ்ச்சி?  கடந்த ஒரு வருடத்தில்  அவர்கள் எந்தெந்த பிக் பாஸ் போட்டியாளரை வைத்து நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்கள் என்றுதான் ஊருக்கே தெரியுமே. என்னை வைத்து எந்த 'வேறொரு' நிகழ்ச்சியை செய்தார்களாம், அதற்கு  நான் 'இன்வாய்ஸ்' அனுப்பவில்லையாம்?  
நான்  சம்பளம் கேட்டு அனுப்பிய  நோட்டீசுகளுக்கும்  சம்பளம் வராத நிலையில் நான் அரசுக்கு  கட்டிய  GST வரிக்கும்  என்னிடம் கட்டுக்கட்டாக ஆதாரம் உள்ளன.  விஜய் டிவியின் சில்லறை புத்தி  இனி செல்லுபடியாகாது.

From around the web