தொடங்கியாச்சு சூர்யா நடிப்பில் வெற்றிமாறனின் வாடிவாசல்!...

வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் இன்று தொடங்குவதாக ஜி.வி.பிரகாஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தொடங்கியாச்சு சூர்யா நடிப்பில் வெற்றிமாறனின் வாடிவாசல்!...

பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்துக்கு பிறகு ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர்.

இதனிடையே பாவக்கதைகள் எனும் தலைப்பில் உருவான ஆந்தாலஜி படத்திலும் வெற்றிமாறன் ஒரு கதையை இயக்கியிருந்தார். இன்னொருபுறம் வெற்றிமாறன் தமிழ், ஆங்கில நாவல்களில் அதிகம் ஈடுபாடு உடையவர் என்பதால் நாவல்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை இயக்குவதிலும் பெயர் பெற்று வருகிறார். குறிப்பாக சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் விசாரணை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இதேபோல் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து தனுஷ் நடிப்பில் உருவாகிய அசுரன் திரைப்படத்துக்கு சிறந்த மாநில மொழிப்படத்துக்கான தேசிய விருதும், நடிகர் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் என 2 விருதுகளை பெற்றது. இந்நிலையில் சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற வாடிவாசல் நாவலை அடிப்படையாக வைத்து சூர்யாவின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் தான் வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் இன்று தொடங்குவதாக ஜி.வி.பிரகாஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.


 

From around the web