ஒரு வருடத்திற்கு பிறகு வந்த வலிமை படத்தின் அப்டேட்!!!

‘தல’ அஜித்தின் ரசிகர்களால் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் வலிமை திரைப்படம்.
 

வலிமை திரைப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் நீண்ட நாட்களாகவே இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த அப்டேட்டும் வெளியாகாமலே இருந்து வந்தது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரபல Forbes பத்திரிகையிடம் வலிமை தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த போனி கபூர், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள வலிமை திரைப்படத்தின் ஒரு சண்டைக் காட்சியைத் தவிர, பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் 'வலிமை' படப்பிடிப்பு நிறைவடைவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வாரம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் ரிலீஸ் தேதி பற்றிய விபரங்கள் இப்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. எனினும் ஒரு வழியாக ஒரு வருடம் கழித்து வலிமை படம் பற்றிய இந்த சிறப்பு அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அஜித் நடிக்கும் வலிமை படம், அதிரடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்.வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ளது.

From around the web