தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக திரைப்படம் நடிக்கும் சிம்பு!

சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நலனுக்காக சிம்பு ஒரு படத்தில் சம்பளமே இல்லாமல் நடிக்கவுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் திரு.சிலம்பரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்த படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் திரு.சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், " வானம் ” படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற திரு.ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.