எஸ்பிபி க்கு என்றுமே இறப்பு இல்லை: பிரபல காமெடி நடிகர் உருக்கம்

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி சென்னையில் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் கொரோனாவில் இருந்து அவர் குணம் ஆனாலும் நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் 

எஸ்பிபியின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரை உலகையே உலுக்கியது எனபதும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் காமெடி நடிகர் மயில்சாமி கூறியதாவது:

இங்கே பலரும் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். நான் அவருடனே வாழ்ந்திருக்கிறேன். நான் அவரோடு உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். 1993 முதல் 2003 வரை அவரோடு நான் போகாத நாடு கிடையாது. என் மீது அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. பாலு சாரை விதம் விதமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் கோபப்பட்டு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

அவருக்கு சரண், ஷைலஜா, சுபலேகா சுதாகர், நான் உட்பட மொத்தமே 13 பேர்தான். ஒரு முறை வெளிநாடு செல்லும்போது குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி தெரியாமல் எங்களைச் சிரிக்க வைப்பதே நீதான்டா என்று நெகிழ்ச்சியுடன் கூறி எனக்கு மாலை போட்டார்.

என் மகனின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றேன். அந்தத் தேதியில் தான் ஊரில் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். ஆனால், இன்று அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதைத் தாங்க முடியவில்லை. அவருக்கு இறப்பே இல்லை. அவரது பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் என் பாலு அண்ணன் என் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பார்''.

இவ்வாறு மயில்சாமி பேசினார்.

From around the web