டாப்ஸியை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷ்

'மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அரசாங்கம் அதை பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது தற்கொலைக்கு சமம்.
 

விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு அமெரிக்க நடிகை ரியானா, மியா காலிஃபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா உள்ளிட்டோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

இதையடுத்து பல்வேறு இந்திய பிரபலங்கள், 'இந்திய உள்நாட்டு பிரச்சனை குறித்து வெளியில் இருப்பவர்கள் கருத்து சொல்ல வேண்டாம் என அடுத்தடுத்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 

இந்நிலையில் தற்போது பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். நேற்று நடிகை டாப்ஸி தனது கருத்தை தைரியமாக ட்விட்டரில் தெரிவித்தார். 

இப்போது இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ''போராட்டம் மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதம். மக்களால்தான் ஆளும் உரிமை அரசுகளுக்கு கொடுக்கப்படுகிறது. அவர்கள் மக்களைதான் பாதுகாக்க வேண்டும் மாறாக கார்பரேட்களை அல்ல. உரிமைகளுக்காக போராடுவதும், அதை ஆதரிப்பதும் ஜனநாயகம்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அரசாங்கம் அதை பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது தற்கொலைக்கு சமம். அவர்கள் உரிமைகளுக்காக போராடுவது ஜனநாயகம். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்'' என பதிவிட்டுள்ளார். 

From around the web