பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகள்: எஸ்பிபிக்காக குவியும் கோரிக்கைகள்!

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஆமோதித்த பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள் பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் தானும் இருப்பதால் எஸ்பிபி அவர்களுக்கு அந்த விருதை வழங்க நான் முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். எனவே அவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.

72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு விவேக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web