அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் வரவு செலவு கணக்கை அந்த அமைப்பின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கமாக அதிமுகவின் பொருளாளர் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யும் நிலையில் பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார். அதனை அடுத்து கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியின் அணி தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 – 22 ஆம் ஆண்டின் அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது என தேர்தல் ஆணையத்திடம் இருந்து தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் ஆணையம் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தற்போதைக்கு வரவு செலவு கணக்கை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியின் ஆலோசனை கூட்டம் இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.