எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயக்குமாரை அங்கீகரிக்கக்கோரி
சபாநாயகர் அப்பாவுடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் திடீரென சந்தித்துள்ளனர்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு கடிதம் அளித்தது. ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் கூட சட்டப்பேரவையில் இருவருக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அவருக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று காலை எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.