News
திமுக திட்டத்தை செயல்படுத்தினால் மின்கட்டண சுமை குறையும்: கனிமொழி

கடந்த சில நாட்களாக அதிக மின்கட்டணம் வருவதாக பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில் இதுகுறித்து வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த வழக்கின் தீர்ப்பை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் திமுக திட்டத்தை செயல்படுத்தினால் மின்கட்டண சுமை குறையும் என திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பன்மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எப்படி இந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்தது என்ற கேள்விக்கே சரியான விளக்கம் கிடைக்காத நிலையில், மின்கட்டணத்திற்கான அவகாசத்தையும் வழங்க மறுத்து வஞ்சிக்கிறது அதிமுக அரசு.
இதுபோன்ற மின்கட்டண பிரச்சனைக்கும், குழப்பங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு செய்வதே தீர்வாக அமையும். இதனை கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே திமுக முன்வைத்தது. இதன்மூலம் பொதுமக்களின் மின்கட்டண சுமையை தவிர்க்க முடியும். எனவே, அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.
கனிமொழியின் இந்த டுவிட்டுக்களுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
