மின் இணைப்பு எண் + ஆதார் இணைப்பு ரத்து செய்யப்படுகிறதா? ஐகோர்ட் தீர்ப்பு எப்போது?

தமிழகத்தில் உள்ள அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மின் இணைப்புக்கும் 100 யூனிட்டுகள் அரசு மானியமாக வழங்கி வருவதை அடுத்து இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி தற்போது விறுவிறுப்பாக மின் இணைப்பு மற்றும் ஆதார் எண் இணைப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மின் இணைப்பு மற்றும் ஆதார் எண் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே சாத்தியம் என்றும் வாடகை வீட்டுக்காரர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்கள் காலி செய்த பிறகு புதிதாக வருவோருக்கு சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் மானியம் வழங்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு தவறானது என்றும் இவ்வாறு அறிவிக்க சட்டரீதியாக வழி இல்லை என்றும் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆக்குவதாக இருந்தால் மானிய தொகுப்பு நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்றும் அந்த அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மின்வாரியம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது வீட்டு உரிமையாளருக்கு வாடகைதாரருக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்றும் மீட்டர் அடிப்படையில்தான் ஆதார் இணைக்கப்படும் என்றும் அனைத்து அனுமதியையும் பெற்ற பின்னரே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.