நாளை காதலர் தினம்; 4 மடங்கு விலை உயர்ந்த முக்கிய பொருள்; ஆன்லைன் புக்கிங்கும் அதிகரிப்பு!

காதலர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதலே ரோஜாக்களின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தினந்தோறும் சுமார் 750 கட்டு ஸ்டெம்பு ரோஜா பூக்கள் வரும் நிலையில் இன்று 250 ஸ்டெம்பு ரோஜா கட்டுகளே வந்துள்ளது. இதனால் இன்று இரண்டாவது நாளாக ஸ்டெம்பு ரோஜா பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 எண்ணம் கொண்ட பல வண்ண ஸ்டெம்பு ரோஜா பூக்கள் கட்டு ஒன்று 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று நான்கு மடங்கு விலை அதிகரித்து 550 ரூபாயாகவும், சில்லறை விலைக்கு ஒரு ஸ்டெம்பு ரோஜா பூ 10 ரூபாயில் இருந்து விலை அதிகரித்து 30 முதல் 35 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

குறிப்பாக தாஜ்மஹால் ரோஜாவான சிகப்பு ஸ்டெம்பு ரோஜா அதிக அளவு விரும்பி வாங்கப்படுகிறது. அதேபோல் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர், பெங்களூர், கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து நேரடி விற்பனைக்காக ரோஜா பூக்கள் வருவது அதிகரித்துள்ளதோடு, இணையதளம் மூலம் பூங்கொத்து வாங்க அதிக அளவில் முன்பதிவு செய்வதும் அதிகரித்து வருகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் பெங்களூர் ,ஓசூர், ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரோஜா பூக்கள் சிகப்பு மஞ்சள் ஆரஞ்சு ரோஸ் உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் வரவழைக்கப்பட்டுள்ளது மேலும் காரனேசன், ஜெரிபுரா, நிசாந்தம் ஆகிய பூக்களும் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால் குறைந்த அளவான ரோஜா பூக்களே தூத்துக்குடி மலர் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக மலர்களால் ஆன பொக்கே தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.