மாண்டஸ் புயல் எதிரொலி: பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் சென்னையில் இருந்து தென் கிழக்கில் சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலானது நாளை தொடந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி , தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை , சேலம் , கடலூர், நாமக்கல்,  திருப்பத்தூர்புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதை அடுத்து, நாளை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.