மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு இன்றும், நாளையும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.