குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றார் திரௌபதி முர்மு! இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்!!

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்று இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜூலை-25, 2017 முதல் குடியரசுத் தலைவராக இருந்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இருவரும் நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து தங்களுக்கான ஆதரவை திரட்டியிருந்தனர்.

ஜூலை 18-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 வரை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்கவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என சுமார் 4800 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்களாக இருந்தனர். எம்பிக்கள் மக்களவை செயலகத்திலும் எம்எல்ஏக்கள் அந்தந்த மாநில தலைமை செயலகத்திலும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் சுமார் 99.18 வாக்குகள் பதிவாகின.

இந்த குடியரசுத் தேர்தலில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். இதில் 50 சதவீதத்திற்கும் மேல் பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.