பூக்கள் விலை இருமடங்கு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை!

நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை வழக்கமாக விற்கும் விலையைவிட இருமடங்கு விலை உயர்ந்துள்ளது விவசாயிகளையும், வியாபரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பூ மார்க்கெட்டில் தினமும் காலை புதுக்கோட்டை சுற்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். நாள்தோறும் இங்கு இருந்து ஒன்று முதல் இரண்டு டன்னுக்கு மேலான மல்லிகை, கனகாம்பரம், சம்மங்கி, பிச்சி ,செண்டி, முல்லை உள்ளிட்ட பூக்கள் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் வழக்கத்தைவிட பூக்களின் வரத்து அதிக அளவில் இருந்தது. மேலும் கடந்த இரு தினங்களில் விற்ற விலையை விட இன்று பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்தது.

மல்லிகை பூ‌ கிலோ 1800 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது‌. முல்லை மற்றும் ஜாதிப்பூ 150க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் இன்று 250 ரூபாய்க்கும், அதேபோல் செவ்வந்திப் பூ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 500 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த செண்டி பூ 80 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கோழி கொண்ட 80 ரூபாய்க்கும், 120க்கு விற்கப்பட்டு வந்த ரோஜா பூ 150 ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சம்பங்கி 350 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகம் இருந்தாலும், இன்று வரத்து குறைவாகவே உள்ளது. வழக்கமாக பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும் பொழுது பூக்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றும் பூக்கள் வரத்து குறைவாக இருக்கும் பொழுது விலை அதிகமாக இருந்தும் பயனில்லை அதனால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் பயன் அளிக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment