வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!

af24b04f94627b38f7891ed2a309e707-1

படைப்புத்தொழிலை செய்துவந்த பிரம்மனுக்கு தனது படைப்புகளில் குறைகள் இருப்பதை உணர்ந்தார். அதற்கு காரணம் என்னவாக இருக்குமென யோசித்த பிரம்மனுக்கு படைப்புத்தொழிலை செய்ய ஆரம்பிக்குமுன் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. உடனே விநாயகப்பெருமானிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டதுடன், அவரை நோக்கி தவமிருந்தார்.. பிரம்மன்முன் விநாயகரும் தோன்றினார். 

ஐயனே! முழுமுதற் கடவுளாம் தங்களை வணங்காமல் எனது தொழிலை துவங்கியதால் எனது சிருஷ்டிகள் அனைத்துமே குறையுள்ளதாகவே இருக்கின்றது. அதனால், தயவுசெய்து எனது சிருஷ்டிகள் அனைத்தும் முழுமையடைய அருள்புரியுங்கள் என பிரம்மன் வேண்டினார்.

விநாயகர் கனிவுடன்  பிரம்மனை நோக்கி, பிரம்மதேவரே! எந்த செயலை செய்யும்முன் என்னை வணங்க வேண்டுமென்று எந்த விதிமுறைகளும் இல்லை. ஆனால், என்னை துதித்தால், செய்யும் செயலில் மனம் முழுமையாக ஈடுபடும், மனது சஞ்சலப்படாது.. மனது ஒருமுகப்படும்.. மனது ஒருமுகப்பட்டால் அனைத்து காரியங்களிலும் முழுமையாய் ஈடுபடமுடியும். முழுமையான ஈடுபாட்டுடன் செய்யப்படும் எந்த செயலும் வெற்றியடையும். என்னிடம் இருக்கும் ஞானம், கிரியை என்ற இரு சக்திகளை தியானித்து உனது தொழிலை ஆரம்பி என அறிவுரைக்கூறி  பிரம்மனது சிருஷ்டிகள் அனைத்தும் முழுமையடைய ஆசீர்வதித்தார். 

பிரம்மனும் விநாயகரின் அறிவுரைப்படி, ஞானம், கிரியையை தியானித்தார். அந்த இரு சக்திகளும் சித்தி, புத்தி என இரு பெண் தெய்வங்களாக பிரம்மன்முன் தோன்றினர்.  அவர்களை வணங்கிய பிரம்மன், எனது தொழிலுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும், அதற்காக, நீங்கள் இருவரும் எனது மகள்களாக அவதரிக்க வேண்டுமென  வேண்டினார். பிரம்மனது வேண்டுக்கோளுக்கிணங்கி சித்தி, புத்தி  இருவரும் பிரம்மனது மகளாக அவதரித்து பிரம்மனது படைப்புத்தொழிலுக்கு உதவினர். பிரம்மன் முதலில் அண்ட சராசரங்களை படைத்தார். உயிர்களை படைத்து, மனிதர்களையும் படைத்தார். தனது படைப்புகள் முழுமை பெற்றதை கண்டு மனம் மகிழ்ந்தார். 

படைக்கும் கடவுளாய் தனது தொழிலில் சிறந்து விளங்குவதைப்போல், சிறந்த தகப்பனாகவும் விளங்க ஆசைப்பட்டு, தனது மகள்களான சித்தி, புத்திக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். பிரம்மனது இல்லத்திற்கு வந்த நாரதர்,  பிரம்மா! சித்தி, புத்தி ஆகிய இருவரும் இரட்டைப்பிறவிகள் அவர்களுக்கு தனித்தனியாக மாப்பிள்ளை பார்ப்பதைவிட ஒரே மாப்பிள்ளையாக பார்ப்பது வெகு சிறப்பு என தனது கருத்தினை சொன்னார். 

இரு பெண்களுக்கு ஒரே மாப்பிள்ளையா?! பின்னாளில் ஏதும் பிரச்சனை வராதா என்று பிரம்மன் கேட்க, அதெல்லாம் வராது. அதற்கு ஒரு வழி என்னிடம் இருக்கிறது. உன் பெண்களுக்கு சிறந்ததொரு மாப்பிள்ளையை கொண்டு வருவது என் பொறுப்பு. நீ கவலையை விடு என பிரம்மனுக்கு உறுதியளித்து, நேராய் கைலாயம் சென்றார். 

அங்கு நாரதரை கண்டு வணங்கி, ஐயனே! தங்களையே மணக்க வேண்டுமென ஆவலில் இரட்டைப்பிறவிகளான சகோதரிகள் இருவர் உங்களுக்காக காத்திருக்கின்றனர். அவர்களால்தான் உங்களது பிரம்மச்சரியம் முழுமை பெறவேண்டும்.. அவர்களை மணந்து அவர்களையும், இவ்வுலகிற்கும் நன்மைகள் செய்யவேண்டுமென நாரதர் விநாயகரிடம் வேண்டி நின்றார்.

நாரதரே! உமக்கு சித்தி, புத்தி என்ற பெண்கள்மீது கருணையெல்லாம் இல்லை. என் பிரம்மச்சரியத்தை குலைக்க வேண்டும். அதுதானே உனது நோக்கம். நாரதர் கலகம் நன்மையில்தான் முடியுமென எனக்கு தெரியும். அதனால் உனது வேண்டுக்கோளுக்கிணங்கி, அவ்விரு பெண்களையும் மணக்கின்றேன் என  நாரதருக்கு வாக்களித்தார், 

தனது வேண்டுக்கோளுக்கு உடனே விநாயகர் ஒப்புக்கொண்டதை நினைத்து மகிழ்ச்சியுற்ற அதேவேளையில், இத்தனை நாள் கட்டிக்காத்து வந்த தனது பிரம்மச்சர்யத்தை  உடனே கைவிட விநாயகர் எப்படி சம்மதித்தார் என  நாரதர் குழம்பினார். அவரது குழப்பத்தை உணர்ந்த விநாயகர், நாரதரே! உமது குழப்பத்துக்கு விடை விரைவில் கிடைக்கும். நீ சென்று, பெண்வீட்டில் கலந்துப்பேசி நிச்சயம் செய்துவிட்டு வா என  நாரதரை அனுப்பி வைத்தார்.

நாரதர் பிரம்மதேவர் இல்லத்திற்கு வந்து, பிரம்மரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி, உமது இரு பெண்களையும் மணந்துக்கொள்ள ஒரு சிறந்ததொரு மாப்பிள்ளை சம்மதித்து என்னை உங்களோடு கலந்துப்பேசி திருமணத்தை நிச்சயம் செய்துவர அனுப்பி வைத்துள்ளார் எனக்கூறினார். பிரம்மன் மீண்டும் இரு பெண்களுக்கும் ஒரே கணவரா என யோசித்தார்.  நாரதர், சித்தி, புத்தியை சந்தித்து, இருவரும் ஒரே மாப்பிள்ளையை நீங்கள் மணக்க வேண்டும். உமது தந்தையான பிரம்மன் யோசிக்கிறார். உங்களது கருத்து என்னவென அப்பெண்களை கருத்து கேட்டார்.

766bf2837a0ce93d4c9267af1da9493d

அப்பெண்களும் உடனே விநாயகரை மணக்க சம்மதித்தனர். நாரதர் குழம்பியவாறு பிரம்மச்சாரி விரதம் பூண்டிருக்கும் விநாயகரை மணக்க எப்படி நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என அப்பெண்களை வினவ,  இருவரும் ஒருவரையே மணப்பதற்கான காரணம் வெகுவிரைவில் உங்களுக்கு புரியவரும்.  நீங்கள் திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள் என அப்பெண்கள் கூற, இதைத்தானே விநாயகரும் சொன்னார் என யோசனை செய்தவாறு திருமணத்திற்கு நாரதர்  நாள் குறித்தார். அப்பெண்களை சம்மதிக்க வைத்தார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்தது. சிவபெருமான், பராசக்தி, மகாவிஷ்ணு, லட்சுமி, பிரம்மன்,சரஸ்வதி, முருகர், உள்ளிட்ட தெய்வந்தளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்மதேவனது இல்லத்தில் குவிந்தனர். திருமணம் வெகுவிமரிசையாக நடந்தேறியது..

மகள்களுக்கு திருமணம் நடந்த மகிழ்ச்சியைவிட பிரம்மச்சரிய விரத்தத்தை கைவிட விநாயகரும், ஒருவரையே மணக்க தனது மகள்களும் சம்மதித்ததன் காரணம் புரியாமல் குழம்பினார். தான் நினைத்தபடி இத்திருமணம் நடந்தாலும் பிரம்மனது மனதில் குடிக்கொண்ட குழப்பம் நாரதர் மனதிலும் குடிக்கொண்டிருப்பதை விநாயகர் உணர்ந்தார். 

இவ்விருவரையும் தன் அருகில் அழைத்த விநாயகர், பிரம்மனே! உனது படைப்புத்தொழிலில் பிரச்சனை வந்தபோது என்னை வணங்கி எனது அம்சமான சித்தி, புத்தியை பெற்று சென்றாயே மறந்து விட்டாயா! தனது  அவதார நோக்கம் முடிவடைந்து எனது சக்திகள் என்னுடன் சேர நேரம் வந்துவிட்டது. அதற்கு இத்திருமணம் ஒரு சம்பிராதாயம். இதனால் எனது பிரம்மச்சரியத்திற்கு யாதொரு களங்கமும் ஏற்படாது என திருமணத்திற்கான காரணத்தை விளக்கினார்.

சித்தி, புத்தியுடன் இருக்கும் என்னை வணங்கினால், வாழ்வில் வறுமை இருக்காது, எடுத்த  காரியத்தில் வெற்றி, குறையாத கல்வி, நிறைந்த செல்வம் கிடைத்து அனைத்து நற்பேறும் பெறுவர் என ஆசிக்கூறி சித்தி, புத்தியுடன் அங்கிருந்தோருக்கு காட்சியளித்தார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews