லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்…..

51283c5c0ce01653482e8d4aecbc32b6

மகாலட்சுமி விரும்பி குடியிருக்கும் 26 இடங்கள்:

1. விஷ்ணு பகவான் மார்பு…

மகாலட்சுமி விஷ்ணு பகவானின் மனைவியாவாள். அதனால், விஷ்ணுபகவானின் மார்பில் குடியிருக்கிறாள். அதனால்தான் விஷ்ணு பகவானுக்கு திருவுறைமார்பன் எனப்பொருள்படும்படி ஸ்ரீனிவாசன் என மற்றொரு பெயரும் உண்டு. திருமகளின் அருளைப்பெறவேண்டுமென்றால் விஷ்ணு பகவானையும் சேர்த்தே வழிபட வேண்டுமென்பது விதி. விஷ்ணுபகவானை தவிர்த்து மகாலட்சுமியை மட்டும் வணங்குதல் கூடாது.. பக்தர்களுக்கு வேண்டுபவற்றை அருளுமாறு விஷ்ணுபகவானிடம் தாய்மையுணர்வுடன் எடுத்துச்சொல்லி பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதே மகாலட்சுமிதான்.

2.பசு பின்புறம்…

பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி பசுவின் பின்புறம் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள்.  அதனால்தான் புதுவீடு குடிப்புகும்போது பசுவையும், கன்றையும் அழைத்துவரும்போது பசுவின் பின்புறம் அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வீட்டிற்குள் அழைப்பது. அப்படி செய்வதால் மகாலட்சுமியையே வீட்டிற்குள் அழைப்பதற்கு ஒப்பானது.. பசுவின் பின்புறம் அடிப்பது மகாபாவம்.. தூங்கி எழுந்து பசுவின் பின்புறத்தை முதன்முதலில் பார்த்தால் வெற்றி கிட்டுமென்பது நம்பிக்கை…

3. யானையின் தும்பிக்கை..

யானையின் தும்பிக்கை ஓம் என்னும்  பிரணவ வடிவில் இருப்பதால் அங்கு மகாலட்சுமி வசிப்பதாக சொல்லப்படுகிறது.

4. தாமரை..

  பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை.  அதிலும் செம்மை நிறம் கொண்ட தாமரை என்றால் விருப்பம். அதனால்தான்  அவளை மலர்மகள், பத்மாவதி என அழைக்கின்றனர்.

5. திருவிளக்கு

இருளை அகற்றி வெளிச்சத்தை கொடுக்க விளக்கினால் மட்டுமே முடியும். விளக்கொளியில் எல்லா தெய்வத்தையும் வணங்கலாம். விளக்கின் சுடரில் மகாலட்சுமி இருப்பதாக  சொல்லப்படுகிறது. முப்பெரும்தேவியரும் விளக்கினில் இருந்தாலும் மொத்த விளக்குமே மகாலட்சுமியின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

6. சந்தனம்..

வாசனைப்பொருட்களிலும், மங்கலப்பொருட்களிலும் மகாலட்சுமி இருக்கிறாள் என சொல்வர்.  மங்கலப்பொருட்களின் ஒன்றான சந்தனத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். அதனால்தான் சுபநிகழ்ச்சி, வரவேற்பு, அபிசேக ஆராதனைகளில் சந்தனம் இடம் வகிக்கிறது.

7. தாம்பூலம்..

வெற்றிலை, பாக்கு எனப்படும் தாம்பூலம் மங்கலப்பொருட்களில் ஒன்று. வெற்றிலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தாம்பூலம் மாற்றிக்கொண்டால் கொடுத்த வாக்கை மீறக்கூடாது. சம்மதமென்று பொருள். தாம்பூலம் வைத்து அழைப்பது மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும்.  

8. பஞ்சகவியம்…

பால், தயிர், நெய், சாணம், கோமியம் என்ற ஐந்து பொருட்களின் கலவையே பஞ்சகவியம். இவற்றை உட்கொள்வதால் நோய்கள் நீங்கும். சாணத்தினை கரைத்து வாசல் தெளிப்பதாலும், வீட்டினுள் கோமியத்தினை தெளிப்பதாலும் துஷ்டதேவதைகள் வீட்டினுள் அண்டாது. விளக்கு வைத்தபின் பால், தயிர், நெய்யினை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் லட்சுமி நம்மைவிட்டு நீங்கிவிடுவாள் என்பது நம்பிக்கை.

9. கன்னிப்பெண்கள்

பெண்களே தெய்வத்துக்கு ஒப்பானவர்கள். அதிலும் சூது, வாது கலக்காத கன்னிப்பெண்கள் மகாலட்சுமியின் அம்சமாகும்.. அதனால்தான் அழகான பெண்களை மகாலட்சுமிப்போல் இருப்பதாக சொல்வர்.

10.உள்ளங்கை..

உள்ளங்கையில் செல்வரேகை, கல்வி ரேகை, ஆயுள் ரேகை என நமது எதிர்காலத்தை நிர்வகிக்கும் ரேகைகள் இருப்பதால் அங்கு லட்சுமி குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் தூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்க்கவேண்டுமென சொல்வது வழக்கம்.

11. பசுவின் கால்தடம்..

பசுவின் கால்பட்ட இடத்தில் பாவம் நில்லாது என்பது ஆன்றோர் வாக்கு. அதனால் பசுவின் கால் பட்ட இடம் செல்வம் கொழிக்கும்.  மாடு என்றால் செல்வம் என்றும் பொருள் உண்டு. பசுவின் கால்தடம் அதிகமாக இருந்தால் அங்கு பசு அதிகமாக இருக்கும்,  பசு அதிகமாக இருந்தால் செல்வம் அதிகமாக இருக்கும்தானே?!

12.வேள்விப்புகை

யாகம் எனப்படும் வேள்வியில் பஞ்சகவியம், பல்வேறு மூலிகைச்செடிகளின் காய்ந்த குச்சிகள், நெய், தேன் மாதிரியான மூலிகைகளை சேர்ப்பதால் யாகத்திலிருந்து வரும் புகையானது மருத்துவ குணம் நிறைந்தது. அப்புகையை சுவாசிப்பவர்களுக்கு நோய் நீங்கும் என்பது அறிவியல் கண்டறிந்த உண்மை. நோய் நீக்கும் அப்புகையில் மகாலட்சுமி இருப்பதாக சொல்லப்படுது..

13. சங்கு..

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளிவரும்முன்பாக மகாலட்சுமியோடு சேர்த்து உப்பு, சங்கு, முத்து மாதிரியான பொருட்கள் வெளிவந்தன. மகாலட்சுமியுடன் சேர்ந்து வந்ததால் சங்கு அவளின் அம்சமாகவே கருதுகின்றனர். சங்கின் ஒலி மங்கலகரமானது. 

14.வில்வமரம்

சிவபெருமானுக்கு உகந்த பத்திரமான வில்வ இலை நிறைந்திருக்கும் வில்வ மரத்தின்கீழ் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள்.  வில்வத்தைவிட சிறந்ததொரு பத்திரமில்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தலவிருட்சமாய் லட்சுமிதேவி தோன்றிய வில்வமரம்தான் தலவிருட்சம். திருவஹிந்திரபுர ஸ்தேத்திரத்தில் மகாலட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சிப்பது சிறந்ததாய் கருதப்படுகிறது..

ac8b35345e8102a32c55249a2f6abf7b

15. நெல்லி மரம்

ஆயுளை வளர்க்கும் மூலிகைகளில் நெல்லி முக்கிய இடம் வகிக்கும்:  நெல்லி உடலுக்கு ஆரோக்கியம் தரும். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. திருமாலின்  தர்மபத்தினியான  மகாலட்சுமி நெல்லியில் இருப்பது இயல்பே! நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி கண்டிப்பாய் வாசம் செய்வாள். துவாதசியன்று நெல்லிக்காயை உணவில் சேர்த்தால்தான் ஏகாதசியில் விரதமிருந்த பலன் கிட்டும்.

16. தருமம் செய்பவர் உள்ளம்..

அடுத்தவர் துன்பத்தை கண்டு மனமிரங்கி உதவும் அனைவரின் உள்ளத்திலும் மகாலட்சுமி வசிக்கிறாள்.

17.புறா மாடம்

 வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடத்தில் மகாலட்சுமி வசிப்பாள். வெண்ணிற புறாக்கள் தூய்மையான இடத்தில் உண்டு, தூய்மையான இடத்தில்தான் வசிக்கும்

18. கற்புநெறி மகளிர்

அடுத்தவர் குடி கெடுக்காத கற்பு நெறியுடன் வாழும் பெண்களிடத்தில்  மகாலட்சுமி வசிக்கிறாள்.

19 தானிய குவியல்

சொந்த நிலத்தில் விளைந்து வந்த தானியங்களின் குவியலிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர், சால் மாதிரியான இடங்களிலும் அவள் வசிக்கிறாள்.

20.சுத்தமான அரிசி

தவிடு, பதர், குருணை நீக்கிய, கல் கலக்காத  சுத்தமான அரிசியில்  மகாலட்சுமி வசிக்கிறாள்.

21. குணமுடையோர்..

பதவி பணம் சேர்ந்தாலும் பணிவு கொண்டோரிடம் மகாலட்சுமி வசிக்கிறாள்.

22. பகிர்ந்துண்போர்..

பசித்திருப்போரை கண்டால் தன்னிடமிருப்பதை பகிர்ந்துண்ணும் நல்லோரிடத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்/

23. நாவடக்கம் கொண்டவர்..

எந்த சூழலிலும் கடுஞ்சொல் சொல்லாதவர், கெட்ட வார்த்தை பேசாதவர் நாவிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

24. மிதமாக உண்பவர்.. 

பசிக்கு உணவே தவிர ருசிக்கல்ல என உணர்ந்து அளவாய் அதேநேரத்தில் ஆரோக்கியமான உணவை உண்பவர், அசைவ உணவை தொடாதவரிடத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்கும் ஆண்களிடத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

26. தூய உடை உடுத்துவோர்..

கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற வாக்கிற்கேற்ப, தூய ஆடை அணிபவர், குளித்து சுத்தமாய் இருப்பவரிடத்தில், காலையும் மாலையும் முகம் கழுவி தலைவாரி அவரவர் சமய மங்கலப்பொருட்களை இடுபவரிடத்திலும், தன்னையும், தன்னை சுற்றியும் சுத்தமாய் வைத்திருப்போரிடத்திலும் லட்சுமி வாசம்  செய்கிறாள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews