தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.
இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்றவிட்டன. திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர்.
இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கே.என். நேரு தரப்பிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தரப்பிற்கும் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.
அங்கே இருக்கும் காவலர்களின் நிலை, மக்களே இது பேர் தான் பாதுகாப்பு கொடுக்கிறதாம் 😀
இடம்: திருச்சி சிவா இல்லம் pic.twitter.com/WDBjYNq7h6
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 15, 2023