பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; திமுக நிர்வாகிகளை நோக்கி சட்டையை சுழட்டிய ஸ்டாலின்!

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை கட்சியில் இருந்து தூக்கியடித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று விருகம்பாக்கம் பகுதி சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அங்கு பணியில் இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் காவலரிடம் அத்துமீறியதாக விருகம்பாக்கம் இளைஞர் அணி நிர்வாகிகள் பிரவீன் மற்றும் ஏகாபாரம் ஆகியோர் மீது புகார் எழுந்தது.

திமுகவின் பெண் எம்.பி.க்களான கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த இளம் பெண் காவலரிடம் திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை தாங்க முடியாத அந்த பெண் காவலர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவம் தீயாய் சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து திமுக நிர்வாகிகளை அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வெளுத்து வாங்கினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே விழாவிலேயே திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன், சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் காவல்துறையினரை சூழ்ந்து கொண்ட திமுகவினர் அவர்களை கைது செய்யக்கூடாது என தரம் தாழ்ந்த முறையில் வாக்குவாதம் செய்துள்ளனர். காவல்துறையினரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த திமுகவினர், இளைஞரணி சார்பில் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர்.

அதில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் கை கூட்ட நெரிசலில் பெண் போலீஸ் மீது தெரியாமல் பட்டிருக்கலாம் என்றும், இதனை பெரிதுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து பெண் காவலரும் தனது புகாரை வாபஸ் பெற்றதால் அவர்களை கைது செய்யவில்லை எனத் தெரிகிறது. இந்த சம்பவம் மக்களிடையே பேசுபொருளாக மாறிய நிலையில், இந்த நிலையில் அதிகாலை பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவரையும் புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயக்ல்பட்டதால், சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி 129வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன், சி.ஏகாம்பரம் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.