அடக்கொடுமையே!! வறுமையால் இருவர் மரணம்; வேதனையின் உச்சத்தில் விஜயகாந்த்!

ஈரோட்டில் உணவில்லாமல் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வறுமையால் இன்று இரண்டு உயிர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மனதை ரணமாக்கிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது.

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில் சாலையில் படுத்துறங்கும் 90 சதவீத மக்கள் வறுமையில் உணவு இல்லாமல்தான் உறங்கும் நிலை உள்ளது. எத்தனை தொழில் நுட்பங்கள் பெருகினாலும், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பசி, பட்டினி, பஞ்சம் போன்ற கொடுமைகளை வெல்ல முடியாமல் மனித குலமே அழிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் முழுமையான உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி ஒவ்வொரு வார்டுக்கு ஒரு அமைச்சரை நியமித்து ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் செய்கிறார்கள்.

டீ குடிப்பது, வடை சுடுவது போன்ற விளம்பர அரசியலை இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். உண்மையில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் ஆட்சியாளர்கள் இங்கு யாரும் இல்லை. தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக மக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே செல்வதில்லை. மக்களை பற்றி கவலைப்படுவதும் இல்லை.

மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி துளியும் நினைத்துகூட பார்ப்பது இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், வறுமையால் இன்று இரண்டு உயிர்கள் உயிரிழந்திருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வறுமையை போக்காமல் மக்களின் உயிர்கள் பறிபோக காரணமாக இருக்கும் அரசியல்வாதிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் ஓட்டுக்காக விளம்பர அரசியல் செய்யாமல் உண்மையில் மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். பசி, பட்டினி, வறுமையை ஒழிக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும். பசியால் இனி ஒரு உயிர் கூட போகாத நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.