Connect with us

நாங்க சரியானவங்கதான் நகைகளை சரிபார்த்துக்கொள்ளலாம் : நடராஜர் கோவில் தீட்சிதர்கள்

gold 1

செய்திகள்

நாங்க சரியானவங்கதான் நகைகளை சரிபார்த்துக்கொள்ளலாம் : நடராஜர் கோவில் தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு துவங்கியது. 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நம்பகத்தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் நிரூபிக்கவே நகை சரிபார்ப்புக்கு ஒத்துழைப்பு என தீட்சிதர்களின் வழக்கறிஞர் பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த நிலையில், கடைசியாக 10வது முறையாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கியது. நகை சரிபார்ப்பதற்கு கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஆய்வுக்கு வருகிறோம் என தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு தீட்சிதர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், நகை பாதுகாப்பு குழுவில் உள்ள சில தீட்சிதர்கள் வடமாநிலங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளில் இருப்பதால் ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்திற்கு பிறகு தேதியை குறிப்பிட்டு உறுதி செய்து கொண்டு வருமாறு தீட்சிதர்கள் பதிலுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

அதன் அடிப்படையில்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தற்போது நகைகள் சரிபார்ப்பு ஆய்வுப் பணிகள் துவங்கி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம் ஆகியோருடன், நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை குமார், விழுப்புரம் குருமூர்த்தி ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் இன்று கோயிலுக்கு வந்தனர். அவர்களை தீட்சிதர்கள் கோயிலுக்குள் அமர வைத்து நகைகள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு கடைசியாக நகைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதன் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதிதான் தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நகை சரிபார்ப்பு ஆய்வு நடந்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில்,

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனி சமய பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது. இது குறித்து நாங்கள் பலமுறை கடிதம் மூலம் இந்து சமய அறநிலைத்துறைக்கு தெரிவித்து இருக்கிறோம். ஆனால் கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வுக்கு ஒத்துழைத்து உள்ளோம். தீட்சிதர்களின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை நிரூபிக்கவே நகை சரிபார்க்க ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.

2005 ஆம் ஆண்டு வரை நகைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளதால் 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒவ்வொரு வருடமும் வரப்பட்டுள்ள நகைகள், கொடுக்கப்பட்டுள்ள ரசீது அதன் எடை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். நடராஜர் கோயில் பற்றி பொது வெளியில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதை தடுக்க இனி வரும் காலங்களில் அனைத்தையும் நாங்களே ஆடிட்டிங் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வைத்து அவற்றை சரி பார்த்து வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top