அந்தக் கால பேய்ப்படங்களின் பிதாமகன் விட்டாலாச்சார்யா.. தியேட்டரையே நடுங்க வைத்த படைப்பாளி

இன்று நாம் பார்க்கும் ஹாரர் மூவி, த்ரில் மூவி, பேய்ப்படங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கி அந்தக் காலத்திலேயே தியேட்டர்களை நடுங்க வைத்தவர்தான் விட்டலாச்சார்யா. விட்டல் புரடக்ஷன்ஸ் என்னும் பெயரில் தெலுங்கு சினிமாவை  சிறிது காலம் ஆண்டவர். இவருடைய மேக்கிங் ஸ்பெஷலே பேய்ப்படங்களை எடுப்பது தான். வெறும் காதல், சோகம், நட்பு என்று சுருங்கிக் கிடந்த சினிமாவை திகில் படங்கள் என்ற வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்றவர்.

விட்டலாச்சார்யா இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றிருக்கிறார். ‘மகாத்மா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் 1944 முதல் 1953 ஆம் ஆண்டு வரை பல்வேறு கன்னடப் படங்களை தன் நண்பர்களுடன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அதன்பிறகு 1953ஆம் ஆண்டு அது விட்டல் புரொடக்‌ஷனாக மாறியது.

இவர் இயக்கிய ‘மாய மோதிரம்’, ‘ஜெகன் மோகினி’ போன்ற திரைப்படங்களை அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை.

அதாவது நம் சின்ன வயதில் நம் பாட்டி சொல்லும் மந்திர, தந்திரக் கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா. ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும்.

தெலுங்கில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1978-ல் வெளியானது விட்டலாச்சார்யா இயக்கிய ‘ஜெகன் மோகினி’. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியில் அதன் விஷுவல் எஃபெக்ட் உத்திகளுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. தொழில்நுட்பம் வளராத எண்பதுகளின் தொடக்கத்தில் பாலிவுட்டில்கூட யாரும் யோசித்துப் பார்க்க முடியாத பல உத்திகளைப் பயன்படுத்தினார் விட்டாலாச்சார்யா.

சிவாஜி பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்து போன அமெரிக்க அதிபர்.. யானைக்குட்டியால் சிறப்பு விருந்தினரான சிவாஜி

ஜெகன்மோகினி என்றில்லை, விட்டலாச்சார்யா இயக்கிய மாயா ஜாலப் பேய் படங்களில் பேய் உருவத்தில் நடிப்பவர்கள் அணியும் விதமாகத் தலைமுதல் கால்வரை ஒரே உடையாக இருக்கும்படி வெள்ளை நிறத்தில் ஒரு உடையைத் தயார் செய்தார். இந்தப் பேய் உடைக்கு மண்டையோடு போன்ற முகமுடியும், செம்பட்டை நிறத்தில் நீண்ட தலைமுடியும் என்று பேய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைக்கும் தோற்றம் அது.

அந்தப் பேய் உருவம் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துக்கொண்டே பயந்து ரசித்த காலம் அது. விட்டலாச்சார்யாவின் வெள்ளைப் பேய்கள் தங்கள் கால்களை எரியும் அடுப்பில் வைத்து விறகாக்கிப் பலகாரம் சுடுவதும், பிறகு அவை ஆடாகவும், கோழியாகவும், பெண்ணாகவும் சட்டென்று மாறுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத விஷுவல் எஃபெக்டுகள். அழகிய பெண்ணாக இருக்கும் உருவம் அடுத்த நொடி வெள்ளைப் பேயாக மாறும் ஆச்சரியம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.

இவரது படங்களில் வரும் துஷ்ட தேவதைகள் கேட்கும் காணிக்கைகள் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மாய மோகினி படத்தில் வரம் கேட்கும் மந்திரவாதியிடம் துஷ்ட தேவதை என்ன கேட்கும் தெரியுமா?… உலகத்திலேயே தாயை மிகவும் மதிக்கும் ஒருவனைத் தேடி அவன் கையாலேயே அவன் தாயை கொலை செய்ய வைக்கவேண்டும். இதுபோன்ற வசனங்களை கேட்கும்போதே நமக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.
இன்று ஹாரிபாட்டர் படங்களில் வரும் பறக்கும் துடைப்பத்துக்கு விட்டலாச்சாரியா தன் படங்களில் பயன்படுத்திய பறக்கும் நுட்பங்கள் முன்னோடியாக இருந்திருக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.