பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு நீட் விலக்கு தான். ஏனென்றால் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வினால் பல ஏழை எளிய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்த ஆண்டு நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஏதாவது அறிவிப்பார் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்த நிலையில் நீட் தேர்வு பற்றி பேசாமல் இருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மற்றுமொரு நிகழ்வும் தற்போது அரங்கேறி உள்ளது. அதன்படி தமிழக அரசின் சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் மசோதாவை திரும்ப தமிழக அரசுக்கு அனுப்பினார் தமிழக ஆளுநர் ரவி.
இதுகுறித்து திமுக எம்பி வில்சன் பேட்டியளித்துள்ளார். அதன்படி அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்புவோம் என்று வில்சன் கூறினார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்பட்டு உள்ளார் என்றும் கூறினார்.
ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா? என்று கூட தெரியவில்லை என்று திமுக எம்.பி வில்சன் கூறினார். அதேவேளையில் நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநர் அனுப்ப வேண்டும் என்று சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.