Astrology
தனுசு ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் எதிலும் நிதானமாக செயல்படக் கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. ராசியில் ஜென்ம சனி தொடர்வதால் யாரையும் நம்பி புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம். இளம் வயதில் இருப்பவர்கள் ஜென்ம சனியின் தாக்கத்தை உணர்ந்துக் கொண்டிருப்பீர்கள். தாய் தந்தையர் விஷயத்தில் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். பெற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அவர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சொல்வது எல்லாம் உங்கள் எதிர்கால நன்மைக்காகத்தான் என்பதை பிறகு உணர்வீர்கள்.
இந்த ஆனி மாதம் எந்த காரியம் செய்தாலும் சிரமப்பட்டு தான் முடிக்க இயலும். ஒரு சிலருக்கு ஒரு வேலையை இரண்டு, மூன்று முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருந்து கொண்டே இருக்கக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள்.
ஆனி மாதத்தில் பிற்பகுதியில் பிரயாணங்கள் செய்ய வேண்டி வரக்கூடும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பயணத்தின்போது எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகலாம். வெளிநாடு தொடர்புடைய தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு யோகமான நேரமாக இருக்கக்கூடும்.
