’தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு: டிஜிபி சுற்றறிக்கை

’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என டிஜிபி சுற்றறிக்கை வெளியேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் உருவான ’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் இந்த படத்தை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. ஆனால் சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.

the kerala story 1

கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள அப்பாவி இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்துள்ளதாக இந்த படத்தின் கதை அம்சம் உள்ளது என்று இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. எனவே இந்த படம் தமிழகத்தில் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் ஆணையர்கள் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த படம் வெளியாகும் தியேட்டர்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சேபனைக்கு உரிய சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews