News
கொரோனா குறையும் நேரத்தில் வேகமெடுக்கும் டெங்கு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது என்பதும் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கையை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய குறைய டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரஷோபாத் என்ற மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 42 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் மட்டுமன்றி வேறு சில மாநிலங்களிலும் டெங்கு வைரஸ் பரவி வருவதாகவும் இதனை அடுத்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் மோஷன் அவர்கள் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
டெங்கு நோய் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம். டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் நோய் பரவலை தடுக்க விரைவு குழுக்கள் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் கொரோனா தடுப்பை எவ்விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
