பசுமாடு மீது வந்தே பாரத் ரயில் மோதிய நிலையில் தூக்கி எறியப்பட்ட அந்த பசுமாடு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்ததை அடுத்து அந்த நபரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. சென்னையிலிருந்து கூட 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பதும் சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவைக்கு இயக்கப்படும் இந்த ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் அவ்வப்போது மாடுகள் மீது மோதி வரும் விபத்துக்கள் நடந்து வருகிறது என்பதும் இந்த விபத்தால் மாடுகள் உயிரிழந்து வருவதோடு வந்தே பாரத் ரயிலின் முன் பகுதிகள் சேதமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் வந்தே பாரத் செல்லும் வழிகளில் இரண்டு பக்கமும் வேலி அமைக்க திட்டமிட்டுவதாகவும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பசுமாடு குறுக்கே வந்துள்ளது. இதனை அடுத்து அந்த ரயில் பசு மாட்டின் மீது பயங்கரமாக மோதியது. இந்த நிலையில் தூக்கி எறியப்பட்ட பசுமாடு ரயில் தண்டவாளம் அருகே படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில் மோதியதால் மாடு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து தூக்கி எறியப்பட்ட அந்த மாடால் மனிதர் ஒருவரும் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.