#Breaking கோவையில் பரபரப்பு… ‘வலிமை பட தியேட்டர் முன்பு நடந்த பயங்கரம்!
வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வலிமை ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், அஜித் கட் அவுட் மற்றும் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைபடம் வெளியான 100 அடி சாலை கங்கா திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து காந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
