நம் தமிழகத்தின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சரவணா ஸ்டோர். இந்த சரவணா ஸ்டோரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் கணக்கில் காட்டாத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்குள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த சூழலில் மீண்டும் ஒரு சரவணா ஸ்டோர் கடை மூடப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இவை வருமானவரித்துறையினரால் அல்ல; மாறாக ஆட்கொல்லி நோயான கொரோனா பாதிப்பு சரவணா ஸ்டோர் ஊழியர்களையும் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது.
அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் 30 ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பணிபுரியும் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர் மூடப்பட்டது. ஏற்கனவே சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.