தீயாய் பரவும் கொரோனா; கோவை விமான நிலையத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யும் பணிகளும் இன்று முதல் தொடக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையும் புரட்டி போட்டு வரும் கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், சீனாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும் ஒமைக்ரானின் பிஎப்.7 என்ற புதிய வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்தியாவிலும் 3 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதலே கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளன. பல நாடுகளை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பயணிகள் தெர்மல்
ஸ்கேனர் மூலம் கண்காணிப்பட்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்திற்கு காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் இன்று முதல் பயணிகளை கண்காணிக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.