கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு என்பது நடத்தப்படாமல் இருந்தது . இதனால் காலாண்டு , அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
தமிழகத்தில் நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. நாளை தொடங்கும் பொது தேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,119 மையங்களில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்நிலையில் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதும் அறையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
தேர்வறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆறடி இடைவெளி கட்டாயம்
கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்
மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம்
3 அடுக்கு முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும்
பள்ளிகளுக்குள் வரும் மாணவர்களுக்கு, 3 அடுக்கு முகக்கவசம் வழங்கப்பட வேண்டும்
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சுகாதாரத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.