எம்பியாக இருந்த ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் எம் பியாக இருந்த ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தினசரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு:
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் போலீசார் பாரிக்காடுகளை கொண்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் எம் பி பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வருகை தந்த நிலையில் காவல்துறையினர் பாரிக்காடுகளை கொண்டு ஏற்படுத்திய தடுப்புகளை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சிறிய அளவிலான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகளையும் தாண்டி ரயில்வே நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சுமார் 200 பேரை கைது செய்தனர். அப்போது ஒன்றிய அரசையும் பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் காவல்துறையினர் தடுப்பை மீறி ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் கைது:
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளை ஏந்தியும், பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பி ரயில் நிலையத்தில் உள்ளே நுழைய முயன்ற நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.
பின்னர் ரயில் நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது
செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்வதற்கு ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் அவர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ்னர் மற்றும் காவல்துறை நடையை தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300-க்கு மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் பரபரப்பு:
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக குளித்தலை பஜனை மடத்திலிருந்து ரயில் நிலையம் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டுவாறு வந்தனர்.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினரை குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் முன்பே அவர்களை மறித்தனர்.
மேலும் ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் வாசல் முன்பு நின்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை குளித்தலை போலீசார் கைது செய்து அண்ணா திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.