தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநரின் உரையில் 65வது பாயிண்ட்டில் பெரியார், அண்ணா என இருந்த பத்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட குறிப்பை, ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
ஆளுநரின் செயலை கண்டித்து முதல்வர் பேசி கொண்டிருந்த போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினர்.சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதலமைச்சர் கண்டனத்தை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார்.
சட்டமன்ற நிகழ்வுகள் நிறைவடைந்து தேசிய கீதத்திற்கு பிறகு வெளியேற வேண்டும் என்ற வழக்கமான நடவடிக்கைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆளுநர் வெளியேறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழ் நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது. அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான பதிலடி.
முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது. அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ் நாட்டின் விருப்பம்.
சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.