குபீர் சிரிப்பு குமரிமுத்து கல்லறையில் இப்படி ஒரு வாசகமா? மறைந்தும் ரசிக்க வைக்கும் மகா கலைஞன்

தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் முதல் யோகிபாபு வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் தனது தனித்துவமான மேனரிஸத்தால் திரையுலகைக் கலக்கியவர் நடிகர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”… என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி.

பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறினார். தனது அண்ணன், அண்ணி ஆகியோர் சினிமா துறையில் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் நாடகங்கள் பலவற்றில் நடித்து தன்னை மெருகேற்றி பின்னர் சகோதரனின் முயற்சியால் சிறு சிறு வேடங்களில் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கினார். தனது சொந்த ஊரான கன்னியாகுமரியின் மீது கொண்ட பற்றால் தனது பெயரில் குமரியைச் சேர்த்துக் கொண்டு குமரிமுத்தாக சினிமாவில் 1970-களில் நடிக்க ஆரம்பித்தார்.

இயக்குநர் மகேந்திரன் இவரது நாடகத் திறமையைக் கண்டு தனது முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நண்டு போன்ற படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார். தொடர்ந்து மகேந்திரனுடன் 9 படங்களில் பணியாற்றினார்.

ஜோடிப் பாட்டு சோகப் பாட்டா வேணாம்.. இளையராஜா சொன்னதால் பிறந்த குடகுமலை காற்றினிலே பாடல்

குமரிமுத்துவின் திறமையைச் சொல்லும் மற்றொரு படம் ‘பாலைவனச் சோலை’. ஈரவிழிக்காவியங்கள், தேவி ஸ்ரீ தேவி, இது நம்ம ஆளு, கோழிக் கூவுது, கொக்கரக்கோ, தூரம் அதிகமில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று, ஏதோ மோகம், பசி, நினைவுகள், இலையுதிர்க் காலம் என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரது சிரிப்புக்காகவே திரையுலகில் அதிகம் ரசிக்கப்பட்டவர் திமுகவில் ஐக்கியமாகி பல ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 சென்னையில் காலமானார். இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான குமரிமுத்துவின்  கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது தந்தைக்காக அவரின் அவரின் வாரிசுகள் அவரின் டிரேட்மார்க் சிரிப்பைக் குறிப்பிட்டு “It is the time for the God …to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு… ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் எழுதியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...