இந்த கல்லூரிக்கு அவ்வளவு போட்டியா? அப்படி என்ன அதிசயம் இருக்கு !

தமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் கலை அறிவியல் கல்லுரிகளில் சேர மாணவர்கள் அதீத ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

2023-2024 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கி ஏராளமானோர் படை எடுத்து வருகின்றனர். இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

இவர்களுக்கான தரவரிசை பட்டியலும் கல்லூரி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி பெற்ற அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னை மாநிலக் கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரிகளில் சேர்க்கை பெற அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

பிகாம், பிஎஸ்சி, கணினி அறிவியல், பிஎஸ்சி தகவல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் காணப்படுகிறது. இதற்காக பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பம் கிடைக்கப்பெற்று இருப்பதால் கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் வரை கல்லூரிகள் உயர்த்தியுள்ளன.

அதுமட்டுமின்றி மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் 100% கட் ஆப் மதிப்பெண் பெற்றதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

கல்லுரிகளில் வழக்கமாக மாணவர்கள் தேர்வு செய்யும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை விட அவர்களது கவனம் கணினி அறிவியல், பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவுகள் பக்கம் திரும்பி உள்ளது. இந்த மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்கள், புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகள், சிறந்த ஆய்வகங்கள் சார்ந்த கல்லூரிகளில் படிக்கும்போது எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். இதற்காக கல்வி நிர்வாகங்களும் நவீன தேவைக்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு பிற துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் சீட்டு கிடைக்காத மாணவர்கள் துவண்டு விடாமல் தனித்துவமிக்க துறைகளில் சேர்ந்து கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளலாம் என்பது கல்வி காலர்களின் கருத்தாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.