‘கோயம்பேடு மார்க்கெட்டில் 8 ஏக்கரில் பூங்கா’ – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!

சென்னை கோயம்பேட்டில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர் பாபு தலைமையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக, சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நவீனமயமாக்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறை களைந்து, சீரான போக்குவரத்திற்கு உரிய ஏற்பாடு செய்தல், வளாக பகுதியில் உலவிடும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சரிசெய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோயம்பேடு காய்கறி சந்தையை வெளிநாடுகளில் உள்ள காய்கறி மார்க்கெட் போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சந்தைக்கு அருகில் 8 ஏக்கர் பகுதியில் பூங்கா அமைக்கவும் முதலமைச்சர் உத்தரவின் படி செயல்படுத்தி வருகிறோம். சந்தைக்கு வரும் மக்கள் மன அழுத்ததை குறைக்கும் வகையில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகள் இப்போது சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது, இன்னும் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது சேத்துப்பட்டு பயோ கேஸ் தயாரிப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோயம்பேடு பகுதியிலேயே பயோ கேஸ் தயாரிப்புக்கான கட்டமைப்பு செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து வாகன நெரிசல் பிரச்சினை கடந்த நாட்களில் பண்டிகை காலங்களில் இருந்தது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர், திருச்செந்தூரில் கூட சமீபத்தில் ஆதீனத்தின் நிலங்களை மீட்க நாங்களும் ஒத்துழைப்பு தந்திருந்தோம். ஆதீனங்களும் இடங்களை அடையாளம் காட்டினால் அதனை மீட்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை உறுதுணையாக இருக்கும். இந்த ஆட்சியில் தான் வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு 4000 கோடி அளவில் சொத்துக்களை மீட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.