இனி இவர்களுக்கு ரூ.1 முதல் 12 லட்சம் வரை இழப்பீடு அதிகரிப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு 12 லட்சம் வரை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவத்தை நிலைநாட்டுவதை அனைத்து தனிநபர்களும் தங்களது வாழ்க்கை நெறியாகக் மனதிலே பதிவு செய்து கொள்ள வேண்டும்! அதனால்தான் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் 1995-ஆம் ஆண்டு விதி 16-ன்படி மாநில அளவிலான ‘உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’ திருத்தியமைக்கப்பட்டது.

அதன் முதல் கூட்டம் 19-08-2021 அன்று நடத்தப்பட்டது. அப்போது அதில் பங்கேற்ற உறுப்பினர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நமது அரசு பரிசீலித்து, முதல் வரவு – செலவு கூட்டத் தொடரிலேயே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில்தான், ‘மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்’ அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை 110 விதியின் கீழ் நான் வெளியிட்டேன்.

உடனடியாக அதற்கான சட்டம் 22-09-2021 அன்று இயற்றப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. ஆணையத்திற்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் 4 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, அந்த ஆணையம் தற்போது எண்.31, தேனாம்பேட்டை, செனடாப் சாலையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணையும் போடப்பட்டுவிட்டது.

இதுதொடர்பான வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் முயற்சியாக- ‘முறையாக நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம்’ ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் நான் அறிவித்தேன்.

அதோடு, “சமத்துவம் காண்போம்” என்ற தலைப்பில் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன என்பதை இன்று உங்களிடையே நான் பகிர்ந்துகொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment