50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. பெண் குழந்தைகள் வைத்துள்ளவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை:  CM girl Child Protection Scheme :  முதலமைச்சர் திட்டத்தின்படி 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் பயனடையலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992ம் ஆண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போதும் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, சமுதாயத்தில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் உணர்வோடும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திட வேண்டும். இதனிடையே கல்வியில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் வகையில் 2001ம் ஆண்டு மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் சிறு குடும்ப முறையினை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தின் படி ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பிறப்பு சான்று, பெற்றோரின் வயது சான்று, பிறப்பு சான்று அரசு மருத்துவரின் சான்று , குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை), வருமான சான்று ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிட சான்று போன்றவற்றை பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2வது பெண் குழந்தையின் 3 வயதுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்” இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews