நாச்சியார்-விமர்சனம்

நாச்சியார்: தமிழ்

இயக்கம்: பாலா

நடிப்பு: ஜோதிகா, ஜீ.வி பிரகாஷ், அறிமுக நாயகி இவானா மற்றும் பலர்.

ஜோதிகா மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகி விட்டது இந்த படத்தின் மூலம் நன்றாக தெரிகிறது.

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஒற்றை வசனம் மட்டுமே அதில் இடம்பெறச் செய்து இருந்தார் பாலா. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அப்போதே தொற்றிக்கொண்டது.

மற்ற போலிஸ் படங்களைப்போல வள வள வசனமெல்லாம் இங்கு இல்லை. யதார்த்தமான நேர்மையான போலிஸ் அதிகாரியாகவே வாழ்ந்து இருக்கிறார் ஜோதிகா.

இதே கதாப்பாத்திரத்தை ஒரு ஆண் நடிகர் செய்து இருந்தால் அவருக்கு ஜோடி, டூயட், ஃபைட் சீன், இத்தியாதி இத்தியாதி என ஒர் பெரிய லிஸ்ட்டே பாலா விரும்பாவிட்டாலும் கூட எப்படியாவது திணிக்கப் பட்டு இருக்கக் கூடும். அவற்றில் இருந்தெல்லாம் இப்போது நாம் தப்பித்து விட்டோம்.

போலிஸ், கோர்ட்களின் உண்மை முகமும், சென்னை- சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் விளிம்பு நில மக்களின் தினசரி வாழ்க்கையும் உள்ளது உள்ளதுபடியே கண்முன் விரிகிறது.

இதுவரை வெளியான படங்களில் சும்மா கிறுக்குத்தனமான விடலைப்பையனாக வந்து போன பிரகாஷை டிரில் எடுத்து நடிக்க வைத்து இருக்கிறார் பாலா. உண்மையாக காதலிக்கும் காதலனாக இந்த படத்தில் தான் பிரகாஷை பார்க்க முடிகிறது.

அரசியாக வரும் இவானா வெகுளித்தனமான நடிப்பிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி சிறப்பாக நடித்து இருக்கிறார்.

ஒரு குற்றம் நிகழ்ந்தால் அது எப்படி போலீசாரால் கண்டறியப்படுகிறது, விசாரணை நடக்கும் விதம், நடைமுறை சிக்கல்கள் என்னென்ன?, ஒருவேளை பணக்காரர்கள், அதிகாரபலமுடையவர்கள் தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வார்கள் என எல்லாமே கிழித்தெரியப்பட்டுள்ளது.

இதோ க்ளைமாக்ஸ் கூட நாம் இதுவரை கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத படி – கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் கூட இது சரிதான், இப்படித்தான் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கணமாவது தோன்றுகிறது. பாலா படத்தில் ஒரு சோகமான க்ளைமாக்ஸ் இருக்கும். இந்த முறை அந்த சோக முடிவை கதா நாயகர்களிடம் இருந்து இடம் மாற்றி வில்லனுக்கு கொடுத்து விட்டார் பாலா.

நாச்சியார்: இதுவரை நாம் பார்த்த ஜோதிகா இல்லவே இல்லை. எதோ ஒரு படத்தில் ஒரு வசனம் வரும்-  “சிவாஜி வாங்கும் சம்பளத்து மேலாகவே நடித்துக் கொடுப்பார்” என்று. இந்த படத்தில் ஜோதிகா அந்த வேலையை செய்து இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment