News
சுபஸ்ரீ வழக்கில் கடைநிலை ஊழியரை பலிகடா ஆக்காதீர்கள்: சாட்டையை கையில் எடுத்த நீதிமன்றம்

குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதிமுகவின் பேனர் ஒன்று விழுந்தததால் பரிதாபமாக பலியானார். இதுகுறித்த வழக்கில் இன்று நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சுபஸ்ரீ குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த தொகையை அலட்சியமாக பணி செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர்மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று போலீசார்களுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும் மாநகராட்சி ஆணையர் எடுக்கும் நடவடிக்கையை தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த விஷயத்தில் நீதிமன்றம் சாட்டையை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது
