மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு!

ஆடிப்பூரம் என்றதுமே நமது நினைவில் சட்டென்று நினைவுக்கு வருவது ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தான்’! தந்தை பெரியாழ்வார் தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்து செல்வதை பார்த்த ஆண்டாள், அதை யாருக்கும் தெரியாமல் தமது கழுத்தில் அணிந்து அழுகு பார்ப்பது வழக்கம்.

அப்பொழுது அவளது கூந்தல் முடி ஒன்று பூமாலையில் ஒட்டிக் கொண்டு இருப்பதை பெரியாழ்வார் பெருமாளுக்கு அணிவிக்கும் பொழுது பார்த்து அதிர்ந்து போனார். இதனை கண்ட பெரியாழ்வார், இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இனி எப்படி ஆண்டவனுக்கு சாத்துவேன்?’ என்று தயங்கினார்.

அப்பொழுது அந்த பெருமாள் அவரது கனவில் தோன்றி, ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த அம்மாலையே எமக்கு உகந்தது ‘ என்று கூறினார். அரங்கன் மீதான அளவு கடந்த பக்தியால், ஆண்டாள் பெருமாளை கரம் பிடித்து சூடி கொடுத்த சுடர் கொடியானாள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருவர். ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடிப்பூர தினத்தன்று தான். ஆண்டாளின் அருளைப் பெறும் வகையிலும், ஆடிப்பூரம் தினத்தன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றது.

ஆடிப்பூரம், ஆடி மாதத்திலே பூரம் நட்சத்திரம் இருக்கும் பொழுது கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் கன்னி பெண்கள் விரதம் இருந்து ஆண்டாளை வழிபாட்டால் மனம் போல் வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கும் இருபாலரும் ஆண்டாளை வழிபாட்டால் திருமணம் விரைவில் கைக் கூடும்.

ஆடிப்பூரம் தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் தேரில் பவனி வருவார்கள். அதனை கண்டு வழிபாட்டால் பிறவிப்பயனை அடையலாம் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் எல்லாம் நாட்களும் சிறப்பு தான் என்றாலும் ஆடிப்பூரம் விஷேசம் தான். ஆடிப்பூரம் தினத்தன்று தான் அம்பாளும் அவதரித்து இருப்பதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் உள்ள அம்மன் சன்னதிகளிலும் சிறப்பு அலங்கார, ஆராதனை நடத்துவார்கள்.

அன்றைய தினத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வளையல்கள் கோர்த்து வளைகாப்பு அலங்காரம் செய்வார்கள். ஒரு சில அம்மன் கோவில்களில் அன்றைய தினத்தில் மஞ்சள் காப்பு, குங்குமம் காப்பு, சந்தனக்காப்பு என்று அலங்காரம் செய்து விழா கொண்டாடி மகிழ்வார்கள். ஒரு சில ஆலயங்களில் முளை கட்டிய தானியங்களை அம்மன் வயற்றில் கட்டி வழிபடுவது உண்டு.

அன்றைய தினத்தில் முளைப்பாலிகை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவரவர் வீடுகளில் நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்துவிடுவார்கள். ஆடிப்பூர தினத்தன்று இந்த முளைப்பாலிகையை அம்மன் சன்னதியில் சேர்த்து விடுவார்கள். முளை எந்த அளவிற்கு செழிப்பாக வளர்ந்து உள்ளதோ அந்த அளவிற்கு அந்த வருடம் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் தரும் ஆடிப்பூரம் வழிபாடு:

ஆடிப்பூரம் தினத்தன்று வளையல்கள் பிரசாதமாக தரப்படும். அம்மன் அணிந்த வளையல்களை பெறுவதை பெண்கள் பெரும் பேறாக கருதுகிறார்கள். அம்மன் அணிந்த வளையல்களை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இந்த அம்மன் அணிந்த வளையல்களை அணிந்து கொண்டால் நல்ல படியாக குழந்தை பிறக்கும். அன்றைய தினத்தில் நன்கு அலங்கரித்த ஊஞ்சலில் அம்மனை ஆட்டுவார்கள். இந்த கண்கொள்ள காட்சியை பார்த்தால் வேண்டியது நிறைவேறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews