பெருமாள் கோவில் தீர்த்தம்


நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!

அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது!
அவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.
அவன் உறைவதும் பாற்கடல் நீர். அவனுடன் இருக்கும்அலைமகளும் நீரிலிருந்து வந்தவள்.
“ஆபோ நாரா” என்று ஒரு வார்த்தை உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு! நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதேசமயம் அவனே காரியமாகவும் இருக்கிறான்!

நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு. அதுக்கு வடிவம் என்பதே கிடையாது. ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெறும். அதேப்போல்தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம்தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கிவிடுவான், நீரைப்போலவே

எளிமையான குணத்துக்கு நீர்மைன்னு பேரு.
அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! அவன் உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து, உள்ளங்கை குவிந்து அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கைகளில் வாங்கி தலையில் சுற்றி, கண்ணில் ஒற்றி, சத்தம் வராமல் அருந்த வேண்டும். தீர்த்தத்தினை கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த தீர்த்தம், உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரிய காரணத்தை ‘த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்யதி’ என்று ‘ஸ்மிருதி வாக்யம்’ விவரிக்கிறது.’எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி தூய்மை பெற வேண்டும்’ என்பது இதன் பொருள்.  வீட்டில் வைக்கும் தீர்த்தத்துக்கும் இந்த விதி பொருந்தும்.

இந்த தீர்த்தத்தில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர், மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள் இதோடுகூட முக்கியமாய் துளசி. வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! இந்த தீர்த்தத்தின் வாசனை ஆத்திகரையும் கேட்டு வாங்கி அருந்தவைக்கும். இறைவன் அருளால் வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.